நஸ்ரியா….கண்கள் தான் அவள் உருவம்.

முஸ்லிம் பெண்கள் …என்றைக்கும் எனக்கு ஆச்சரியமாகவே தெரிகிறார்கள்.

கடைத்தெரு வீதி,எல்லா ஊர்களிலும் இந்த தெரு இருக்கும்..அங்கே சில முஸ்லீம் வீடுகளும் இருக்கும்.

நான் இப்பொழுது ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் கூலி வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பணக்காரன்.அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.இன்று வழக்கம் போல் காஞ்ச ரொட்டி ,அதாங்க பீசா சாப்பிடும் பொழுது
ஒரு முஸ்லிம் பெண் படுதா போட்டு நடந்து போவதை பார்த்தேன்…எனக்கு என் நஸ்ரியா ஞாபகம் வந்தது.

நாமக்கல் கடைத்தெரு வீதி…அங்கே ஒரு முஸ்லிம் குடம்பம் …அங்கே ஒரு அழகு தேவதை …

நஸ்ரியா…தேவதை அவள்.

அவள் கூந்தலின் நுனியை கூட நான் பார்த்தது இல்லை ஆனால் என் மனதில் அவள் கூந்தலின் வாசத்தை அடிக்கடி நுகர்ந்துள்ளேன்.
அவள் முகத்தை பார்த்ததில்லை ஆனால் அவள் அழகாக தான் இருப்பாள்.கண்டிப்பாக.

நாங்கள் அங்கே குடியேறும் பொழுது எனக்கு 17 வயது.

அம்மா காப்பித்தூள் வாங்க சொன்னாள்.நாடார் கடைக்கு சென்றேன்,

என் சட்டை பையில் சில்லறை தேடிய வேளையில் “அண்ணா ஒரு பால் பாக்கெட்” என்ற குரல் என் சட்டை ஓட்டையின் வழியாக முதலில் இதயத்தில் ஏறி, பிறகு காதுக்கு சென்றது.

திரும்பி பார்த்தேன் …முகம் தெரியவில்லை.

படுதா போட்டு இருந்தாள்.பாவி.

ஆனால் அவள் கண்கள் மட்டும் தெரிந்தன .பால் கிண்ணத்தின் நடுவே ஒரு பொட்டு “மை” இட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது அவள் கருவிழி.

Nasriyaa

சென்றுவிட்டாள்..ஐயோ!!! பெயர் தெரியலையே.?

“எம்மா நஸ்ரியா சில்லறை வாங்கிட்டு போமா…”,கடைக்காரர் பால் வார்த்தார்.

நஸ்ரியா..எவ்வளவு அழகான பெயர்.

அப்புறம் என் சைக்கிள் சக்கிரம் அவள் தெருவையே சுற்றி சுற்றி வந்தது.

என்றாவது அவள் முகம் காண முடியாதா? பால் வாங்கும் போது? பள்ளி செல்லும் போது ?.

அவள் எப்படி இருப்பாள்?.

அழகாக தான் இருப்பாள்..ஏனென்றால் அவள் கண்கள் போதும் அவள் அழகை கூற.

டையர் தேய்ந்தது தான் மிச்சம்.முகம் காண முடியவில்லை.

அவளை நான் காதலிக்கவில்லை ..ஆனால் ,”அவள் எப்படி இருப்பாள்? ” என்று யோசித்து யோசித்தே அவளை காதலித்து விடுவேனோ என்று பயந்தேன்.

எனக்கு 21 வயது ஆகியது…..ஹ்ம்ம் இப்படி வேணாம்…

இப்படி சொல்லலாம் “மூன்று ரம்ஜான் முடிந்து விட்டது அந்த வீதிக்கு நாங்கள் குடி வந்து…ஆனால் தேவதையின் முகம் காண முடியவில்லை.

“நஸ்ரியாவுக்கு நிக்கா வச்சு இருக்கோம் , நீங்க கண்டிப்பா வரணும் “,அவளின் அம்மா.

இடி விழுந்தது.

நிக்கா….அவளுக்கு. அவளை பார்க்கும் முன்னர், நிக்கா என்றால் “பிரியாணி” தான் எனக்கு தோன்றும்.

இப்பொழுது அவளுக்கு நிக்கா…

சரி ,அதிலாவது அவள் முகம் காணலாம் என்று பார்த்தால் ,அதுவரை கிடைக்காத அந்த பாழாய் போன வேலை அப்பொழுது கிடைத்தது.அவள் நிக்கா அன்று சேரச்சொல்லி.
தேவதையின் முகம் பார்க்காமல் ,விமானம் ஏறினேன்.

இதோ..என் கையில் பிஸ்ஸா, இன்றுடன் மூன்று வருடம் ஆகிற்று.நாளை ஊர் போக போகிறேன்.என் பெற்றோர்களை பார்க்கும் ஆசையை விட நஸ்ரியாவை பார்க்கும் ஆசை அதிகம்.

இந்த மூன்று வருடத்தில் நஸ்ரியாவை முகபுத்தகத்தில் தேடினேன்…அனைத்து நஸ்ரியாக்களும் போலி சிரிப்புடம் போஸ் குடுத்து இருந்தார்கள்.

இவைகள் அல்ல அவள்.அவள் கண்கள் அறிவேன் நான்.

ஏன் என்றால், நான் பார்த்தது அதைத்தான்…அதை மட்டும் தான் ..அது போதும் எனக்கு அவளை அடையாளம் காண.
ஊர் திரும்பினேன் ,

டேய்,என்னடா இப்படி இளச்சு போய் இருக்க?,அம்மா.

“அம்மா நஸ்ரியா குடும்பம் எங்கே?”,நான்.

“அவங்க குடும்பம் எப்பவோ துபாய் போய்டாங்க நவீன்,அதை ஏன்டா இப்போ கேட்குற?”,அம்மா

.
ஹ்ம்ம்…இனிமேல் என் வாழ்நாளில் அவளின் முகம் காண என்னால் முடியாது.அந்த கண்கள் தான் என் நஸ்ரியா.

நானே உருவம் குடுத்தேன்.

தெருவில் இறங்கி நடந்தேன்.ஆயிரம் ஆயிரம் பெண்கள், வண்ண வண்ண உடைகள்…அரைகுறை ஆடைகள் ..சல்வார்..சேலைகள்….என்ன தான் இருந்தாலும் என் நஸ்ரியாவின் கறுப்பு படுதாவுக்கு ஈடு ஆகுமா?

முழுதும் மறைத்து ,ஒரு ஆணை ஆவலுடன் கற்பனை உலகில் “அவள் எப்படி இருப்பாள்?” என்று யோசிக்க வைக்கும் திறமை ,ரகசியம் படுதாவில் மட்டும் தான் உள்ளது.அரைகுறை ஆடைகள் அனைத்தும் அதன் முன் மண்டியிட வேண்டும்.

நஸ்ரியா….கண்கள் தான் அவள் உருவம்.

என்றும் உன் நினைவில்,

நவீன்.

 

Comments
10 Responses to “நஸ்ரியா….கண்கள் தான் அவள் உருவம்.”
  1. Manithan's avatar Manithan says:

    தம்பிக்கு ஒரு bomb பார்சல் ரெடி பண்ணு.

    • bomb? ஐயோ பாஸ்…இது வெறும் கதை தான்..நான் சொன்னதெல்லாம் நீங்க உண்மைனு நம்பிடீங்க…ஹையோ ஹையோ….

  2. Sobia Anton's avatar Sobia Anton says:

    மிகவும் மிகவும் ரசித்து வாசித்தேன். மனதுக்கு இதமாக இருந்தது.

  3. இஸ்லாமிய பெண்கள் அழகானவர்கள், வலிந்து மூடப்படுகின்றாள் என்றக் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் கூட, சமயங்களில் மூடிய பால் கிண்ணங்களுக்கே அழகு என்பேன். முழு முகம் மறைக்கும் பாங்கில் என உடன்பாடு இல்லை. தங்களின் நஸ்ரியா எனது பாத்திமாவை நினைவுப்படுத்துகின்றாள், அதன் முடிவு சோகங்கள் நிறைந்தவை. உங்களின் நஸ்ரியாவை ஒரு வேளை கண்டிருந்தால் கூட உங்களின் இப் பிரியம் காணமல் போயிருக்கும், ஆனால் காணத கண்களின் ஈர்ப்பு அழகிய ஓர்மைகளாய் என்றும் உங்கள் மனதை ஆட்கொள்ளும், கொள்ளட்டும். 🙂

    • ஹ்ம்ம்…எனது நஸ்ரியா? அப்படி ஒருவள் இல்லவே இல்லை…நான் இப்பொழுது தான் என் கல்லூரி படிப்பை முடித்து இருக்கிறேன்..இது முழுக்க முழுக்க கற்பனையே!!! ஆனால் இதை உண்மை என்று உங்களை நம்பவைததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி

  4. Ethicalist's avatar Ethicalist says:

    நல்ல காலம் தப்பித்து விட்டீர்கள்.
    இல்லையென்றால் என் குடும்பத்துக்கு நடந்த நிலைதான் உங்களுக்கும் நடந்திருக்கும்.

    எனது அம்மா முஸ்லிம் அப்பா இந்து. இருவரும் விரும்பி திருமணம் செய்தார்கள். அம்மா வீட்டில் முழு எதிர்ப்பு. அப்பா வீட்டில் ஏற்றுகொண்டார்கள். (மதம் மாற கூறவில்லை ).

    தொடர்ச்சியாக இருவரை கொலை செய்ய தேடி திரிந்தார்கள். ஒரு சம்பவத்தில் அந்த குழு நேரடியாக இருவரையும் பார்த்து தாக்க தொடங்கியது. ஆனால் அது இந்துகளின் பகுதி என்பதால் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. ஆனால் அம்மாவுக்கு ஒரு கண் பார்வை முழுமையாக போய்விட்டது.

    அதன் பின் இருவரும் வேறு ஒரு பாதுகாப்பான நாட்டுக்கு வந்த பின் தான் நிம்மதியாக இருக்கின்றார்கள்.

    பழனிபாபா காலத்திலேயே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும் ?

    • நஸ்ரியா? அப்படி ஒருவள் இல்லவே இல்லை…நான் இப்பொழுது தான் என் கல்லூரி படிப்பை முடித்து இருக்கிறேன்..இது முழுக்க முழுக்க கற்பனையே!!! ஆனால் இதை உண்மை என்று உங்களை நம்பவைததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி… ஆனால் காதலில் அவர்கள் வெற்றி கண்டதால் தான் இப்பொழுது நீங்கள்!!!.உங்கள் பெற்றோர்கள் நலமாக வாழ வேண்டுகிறேன்.

  5. bagawanjee's avatar bagawanjee says:

    மெல்ல திறந்தது கதவு படத்திற்கு ஒன் லைன் ஐடியா கொடுத்தது நீங்கதானா ?

    • அப்படி ஒரு படம் இருக்குனு நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது ஜி!!!

Leave a reply to bagawanjee Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.